சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்திற்கு பதிலாக அதிகமான பணம் வந்தது. ஆனால் செல்போனுக்கு குறிப்பிட்ட பணம் மட்டுமே எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை எடுத்துள்ளனர். உதாரணமாக அம்பதுறை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் 8000 ரூபாய் எடுக்க முயன்ற போது கூடுதலாக அவருக்கு 12 ஆயிரம் ரூபாய் சேர்த்து 20 ஆயிரம் ரூபாயாக வந்தது. இதே போல் சந்திரசேகர் என்பவர் ரூ.8000 எடுக்க முயன்ற போது அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் வந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களில் 6 பேர் மட்டும் வங்கி திறக்கும் வரை அங்கேயே நின்று, வங்கி திறந்த பிறகு இது தொடர்பாக அதிகாரிகளிடம் எழுதிக் கொடுத்து கூடுதலாக வந்த பணத்தை திரும்பி கொடுத்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து சரிபார்த்த போது ஏ.டி.எம் எந்திரத்தில் 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகள் வைத்ததால் பணம் கூடுதலாக வந்தது தெரியவந்தது. பின்னர் ஏ.டி.எம் எந்திரம் சரி செய்யப்பட்டது. இதனையடுத்து கூடுதலாக பணம் எடுத்தவர்கள் யார் என்ற விவரம் குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.