தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பணையாக்கோட்டையில் வசிப்பவர் வெள்ளையப்பன் (42). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வரும் இவரை   சிலர்  தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் ரூ.80 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை நீங்கள்  கொடுத்தால், அதற்கு பதிலாக ரூ.1 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகளை தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறியதால், அவரும் அதை நம்பியுள்ளார். பின் இது பற்றி வெள்ளையப்பன், தனது நிறுவன உரிமையாளர் முருகராஜ் மற்றும் சிலரிடம் கூறி, ரூ.60 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை திரட்டினார்.

அதற்கு ரூ.75 லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக தருவதாக அந்த கும்பல் கூறியதையடுத்து, அந்த தொகையுடன் வெள்ளையப்பன், முருகராஜ் இருவரும் தேனிக்கு சென்றுள்ளனர். இதன் பிறகு அவர்களை ஒருகும்பலை சேர்ந்தவர்கள் தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் அழைத்துச் சென்றனர். பின் கத்தி முனையில் அவரை அச்சமடைய செய்து ரூ.60 லட்ச பணத்தை பறித்து காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் இது குறித்து வெள்ளையப்பன் புகார் கொடுத்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய வீரபாண்டியை சேர்ந்த யுவராஜா மற்றும் கார்த்திக்ராஜா என்ற இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின் அந்த நபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பணம் மற்றும் 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய கும்பலை சேர்ந்த சில நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதற்கான திட்டத்தை ‘சதுரங்கவேட்டை’ என்ற திரைப்பட பாணியில் யோசித்து நிறைவேற்றியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.