பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு அழுகிய  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 98 மையங்கள் மூலம் சத்துணவு முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முட்டைகள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனேக பள்ளிகளில் சத்துணவு முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. முட்டைகள் அழுகி  இருப்பதாகவும், கடந்து சில நாட்களாக இந்த பிரச்சினை இருப்பதாக சத்துணவு அமைப்பாளர்கள் அதிகாரியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது..

ஒரு சில மையங்களில் அமைப்பாளர்கள் மாற்று ஏற்பாடு செய்து முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கியதாக தெரிகிறது. புகாரை கேள்விப்பட்ட  ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் ராஜேந்திரன் கெட்டுப்போன முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது எனவும், அதற்கு பதிலாக கடையில் வாங்கி அல்லது நாளைக்கு வழங்கக்கூடிய முட்டைகள் தரமாக இருந்தால் அதனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்..

கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சினை இருப்பதாக சத்துணவு அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது, நேற்றும், இன்றும்  தான் இந்த பிரச்சினை உள்ளதாகவும், ஏஜென்டிடம் அழுகிய முட்டைகளுக்கு பதிலாக மாற்று முட்டைகளை இறக்குவது தொடர்பாக பேசி உள்ளதாகவும், முட்டைகள் அனைத்தும் கெட்டு போகவில்லை என்றும் மையத்திற்கு 7 – 10 முட்டைகள் மட்டுமே கெட்டுப் போய் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை முதல் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்..