தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்பின் அவர் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பாஜக-அதிமுக மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில் பாஜகவில் இருந்த அதிமுகவில் சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “தமிழகத்தில் பாஜக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதல பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. யாரையும் திருத்த நான் வரவில்லை. கட்சிக்காரர்களையே தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை, பிறகு என்ன அவர் தலைவர் என அண்ணாமலையை சாடி அவர் பேசினார்.