கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டாட்டாபாத் பகுதியில் சுமன் ஜூவல்லரி என்ற நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு பரமேஸ்வரன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பரமேஸ்வரன் கடையில் உள்ள நகைகளின் இருப்புகளை சரி பார்த்த போது நெக்லஸ், டாலர்கள் உள்பட ஏராளமான நகைகள் குறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் உதவி மேலாளராக வேலை பார்க்கும் சசிகுமாரிடம் பரமேஸ்வரன் கேட்டுள்ளார். அதற்கு நகைகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ததாகவும், அதற்கான பணத்தை கொடுத்து விடுவதாகவும் சசிகுமார் தெரிவித்தார்.

அதன்படி சசிகுமார் 19 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பரமேஸ்வரனிடம் கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் போட்ட போது கையெழுத்து சரியாக பொருந்தவில்லை என்று காசோலை திரும்பிவந்தது. இதனை தொடர்ந்து பலமுறை சசிகுமாரிடம் கேட்டும் அவர் பணத்தை தரவில்லை. இதுகுறித்து பரமேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஊழியர்களான ரமேஷ், விஜயன் ஆகியோருடன் இணைந்து சசிகுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் சசிகுமார் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.