ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4ல் வங்காளதேச அணியை  21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி..

2023 ஆசியக் கோப்பையின் 2வது சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை 21 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது. இது சூப்பர் ஃபோரில் பங்களாதேஷ் பெற்ற 2வது தொடர்ச்சியான தோல்வியாகும். எனவே வங்கதேச அணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், வங்கதேச அணிக்கு எதிரான வெற்றிக்கு 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலாக இலங்கை அணி நிர்ணயித்தது. இந்த சவாலை துரத்திய வங்கதேசம் 48.1 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேச அணிக்கு முகமது நயீம், மெஹ்தி ஹசன் மிராஜ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக 55 ரன்கள் சேர்த்தனர். எனினும் இருவரையும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகா ஆட்டமிழக்கச் செய்தார். நயீம் 21 ரன்களிலும், மிராஜ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் லிட்டன் தாஸ் (15), கேப்டன் ஷகிப் அல் ஹசன் (3) ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். பின் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் டவ்ஹித் ஹ்ரிடோய் ஆகியோர் இன்னிங்ஸை முன்னோக்கி கொண்டு செல்ல முயன்றனர். அவர்கள் அரைசதம் பார்ட்னர்ஷிப் செய்து வங்கதேசத்தை 150 ரன்களை கடக்க செய்தார். இருப்பினும், ஷானகவின் பந்துவீச்சில் முஷ்பிகுர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு, டவ்ஹித் ஹ்ரிடோய் ஒரு பக்கம் சமாளித்து நின்றார். இருப்பினும், அவரும் 97 பந்துகளில் 82 ரன்களில் ஆட்டமிழந்தார், அதன் பிறகு கீழ் வரிசையை மத்திஷ பத்திரனா மற்றும் மகிஷ் தீக்ஷனா ஆகியோர் காலி செய்தனர். இதனால் வங்கதேசத்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இலங்கை தரப்பில் கேப்டன் தசுன்ஷானகா, மகிஷ் திக்ஷனா, மத்திஷ பத்திரன ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். துனித் வெலலகே 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

முன்னதாக டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்தது. இலங்கை அணியின் பேட்டிங்கை பதும் நிசங்கவும், திமுத் கருணாரத்னேவும் தொடங்கினர். ஆனால் கருணாரத்னே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் பின்னர் பதும் நிசங்க மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் இன்னிங்ஸை முன்னெடுத்து செல்ல இலங்கை 100 ரன்களை கடந்தது.

ஆனால் நிசங்க 40 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். குஷால் மெண்டிஸும் அரை சதத்தைப் பூர்த்தி செய்த சிறிது நேரத்தில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் அதன் பின்னர் சதீர சமரவிக்ரம இலங்கை இன்னிங்ஸின் ஒரு பக்கத்தை சமாளித்து ஆக்ரோஷமாக அரைசதம் அடித்தார். ஆனால் அவருக்கு வலுவான ஆதரவு கிடைக்கவில்லை.

இருப்பினும், கேப்டன் ஷானகா நல்ல ஆதரவை வழங்க முயற்சித்துள்ளார். சமரவிக்ரமவுடன் அரைசத பார்ட்னர்ஷிப்பையும் பகிர்ந்து கொண்டார். எனினும் அவர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகும் சமரவிக்ரம இறுதிவரை தொடர்ந்து விளையாடி இலங்கையை 250 ரன்களுக்கு கொண்டு சென்றார்.

இருப்பினும், இன்னிங்ஸின் கடைசி பந்தில் சமரவிக்ரமா ஆட்டமிழந்தார். அவர் 72 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் எடுத்தார். முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களை குவித்தது. வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது, ஹசன் மெஹ்மூத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.