சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் கட்டணம் இன்றி இஸ்ரோவில் பட்டப்படிப்பும், பணி நியமனமும் பெறுவார்கள் எனவும், அதற்காக அரசு சார்பில் ஒரு எம்.பி க்கு ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் ஒன்று பரவி வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ கணக்கான தகவல் சரி பார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பதிவில்,”கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது. இஸ்ரோ அமைப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் “யுவிகா” என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்வாகும் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.

அதில் 9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதனை தவறாக இஸ்ரோ பிளஸ்1 மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு வழங்குவதாக பரப்பி வருகின்றார்கள். இதனை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.