சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அங்கு வாழும் இந்தியர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் சூடான் நாட்டில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அன்புமணி ராமதாஸ் சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மற்றும் 3000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சூடானில் தங்கியுள்ள இந்தியர்கள் உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். குழந்தைகளுடன் வசித்து வருபவர்கள் இன்னும் பல இன்னல்களை சந்திக்கிறார்கள். 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் இந்தியர்களை மீட்டு வர முடியவில்லை. இன்று காலை தமிழர்கள் அதிகம் வசிக்கும் உம்துர்மன் நகரம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இனியும் தாமதிக்காமல் சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.