அமெரிக்க நாட்டில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலம் ஆகும். இந்த காலத்தில் அங்கு கடுமையான குளிர், பனிப்பொழிவு, கனமழை, புயல், சூறாவளி போன்றவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இங்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குளிர் அங்குள்ள மக்களை கடுமையாக வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் பயங்கர பணிப்புயலால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் நிலைகுலைந்தது. இதில் பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன் பின்னரும் தொடர்ந்து சக்தி வாய்ந்த பல பனி புயல் அமெரிக்க மாகாணங்களை பாதிப்புக்குள்ளாக்கியது.

அந்த வரிசையில் நேற்று முன்தினம் அந்நாட்டின் தெற்கு மாகாணங்களை அதிபயங்கர புயல் ஒன்று தாக்கியது. இது மிசிசிப்பி, கலிபோர்னியா, அலபாமா, கெண்டக்கி மாகாணங்களில் 129 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தும், வீடுகள் கடைகளின் மேல் உள்ள கூரைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பறந்து விழுந்தன. மேலும் பயங்கர புயலால் அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையினால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமட்டுமல்லாமல் கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்பொழிவு கொட்டிக் கொண்டே இருக்கின்றது.

இதனால் பல மாகாணங்களில் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலை மாற்றத்தால் விமான சேவையும் முடங்கியுள்ளது. புயலால் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால் 7 மாகாணங்களில் உள்ள 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். பனிப்புயலினால் இதுவரை 12 பேர் உயிரிழந்தும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து புயல் தெற்கு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து பென்சில்வேனியாக மாகாணம் வரை உள்ள எட்டு கோடி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.