மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா (Rewa) மாவட்டத்தில், 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது பள்ளி ஆசிரியர் தன்னை ‘சித்திரவதை’ (Torture) செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர், தண்டனை என்ற பெயரில் தனது விரல்களுக்கு இடையில் பேனாவை வைத்து அழுத்தியதாகவும், கையைப் பிடித்துக் கொண்டதாகவும் மாணவி எழுதியிருந்தார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி, வகுப்பில் இருந்தபோது ஆசிரியர் தனது கையைப் பலவந்தமாகப் பிடித்துக் கொள்வார் என்றும், சில சமயங்களில் சும்மா இருக்கும்போது கூட, கையைப் பிடித்துக்கொண்டு தனது கை குளிராக இருப்பதாகக் கூறுவார் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியரின் இந்தத் தொடர்ச்சியான செயல்கள் தனக்குப் பயம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். வீட்டில் சாதாரணமாக இருந்த தனது மகள், பள்ளி சார்ந்த ஏதோ ஒரு காரணத்தாலேயே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறி, தீவிர விசாரணைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது, மாணவியின் வாக்குமூலம் அடங்கிய குறிப்பேடு காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.