ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1 பந்து மீதமிருக்க 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தானுக்கு 301 ரன்கள் வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் நிர்ணயித்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் சிறப்பாக ஆடினார். குர்பாஸ் (151 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்சருடன் 151 ரன்கள்) அதிரடியாக விளையாடினார். இவருடன் இப்ராகிம் சத்ரானும் (80ரன்கள் ) சிறப்பாக விளையாடினார். மேலும் முகமது நபி 29 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹஷம்துல்லா ஷாஹிடி ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார்.

அப்துல் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். குறைந்தபட்சமாக 1 ரன்னில் ஷாஹிதுல்லா ரன் அவுட் ஆனார். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உஸ்மா மிர் மற்றும் நசீம் ஷா இருவரும் தலா 1 விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 301 ரன்கள் என்ற அபார வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் நிர்ணயித்தது.

இந்த சவாலை பாகிஸ்தான் அற்புதமாக துரத்தியது. ஆட்டம் கடைசி ஓவரை எட்டியது. கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியது. இரண்டாவது போட்டியுடன் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றுமா அல்லது ஆப்கானிஸ்தான் வென்று தொடர் சமமாகுமா? வெற்றி பெறுமா என ரசிகர்கள் உற்றுநோக்கினர். ஆனால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு எட்டியது. 3 போட்டிகள் கொண்ட தொடரையும் பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது.

இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர்களான இமாம் உல் ஹக் 105 பந்துகளில் 91 ரன்களும், பாபர் அசாம் 53 ரன்களும் எடுத்தனர். மேலும் ஷதாப் கான் 48 ரன்களும், பகர் ஜமான் 30 ரன்களும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். கடைசி ஓவரில் 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட நசீம் ஷா (10* ரன்கள்) 5வது பந்தில் பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பரூக்கி 3 விக்கெட்டுகளும், முகமது நபி 2 விக்கெட்டுக்களும் எடுத்தனர். மேலும் முஜீப் மற்றும் அப்துல் ரகுமான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஷதாப் கான் ஆட்ட நாயகன் விருது வென்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரையும் பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் பரபரப்பான இன்னிங்ஸ் ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ், இந்திய அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார். விக்கெட் கீப்பராகவும் உள்ள குர்பாஸ், பாகிஸ்தானுக்கு எதிராக 150 ரன்கள் எடுத்த முதல் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். 2005 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பராக எம்எஸ் தோனி (120 பந்துகளில் 148 ரன்கள்) சாதனை படைத்தார். தற்போது ரஹ்மானுல்லா குர்பாஸ் இந்த சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Malcolmishmael2/status/1694774199494267193