இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்களாக கருதப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியும் நடப்பு 2023 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 83 பில்லியன் டாலர்களை தங்கள் சொத்து மதிப்பில் இருந்து இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இருவரும் சொத்துக்களை இழந்தவர்களில் முதல் வரிசையில் இடம் பிடித்துள்ளார்கள் என சொல்லப்படுகிறது.  துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களில் கௌதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.

60 வயதான இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அண்மையில் அதில் பின்னடைவை சந்தித்தார். தற்போது இவரது சொத்து மதிப்பு 42.7 பில்லியன் டாலர்கள் என சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரி இறுதி முதல் தனது சொத்து மதிப்பில் சுமார் 64 சதவீதத்தை கௌதம் அதானி இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவரது மொத்த சொத்து மதிப்பில் சுமார் 78 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம், ரீடைல் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழும தலைவராக உன்ன முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 81.5 பில்லியன் டாலராகும். இவரது சொத்து மதிப்பில் 5 பில்லியன் டாலர் மதிப்பை நடப்பாண்டில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்கார பட்டியலில் தற்போது இவர் 12 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.