
மும்பை கோரேகாவ் ஈஸ்ட் பகுதியில் உள்ள ‘யூமேனியா ஃபிட்னஸ்ஸ் ஜிம்மில்’ கை மற்றும் மூட்டு பயிற்சிக்காக உள்ள எக்சர்சைஸ் உபகரணத்தைப் பயன்படுத்த ஏற்பட்ட தகராறு, தீவிரமான வன்முறையாக மாறியது. இதில் 25 வயதான கவுரவ் மிஷ்ரா என்ற இளைஞர் கடுமையாக காயமடைந்துள்ளார். அவர் ஒரு கட்டிடக் கலைஞராக (Architect) பணியாற்றுகிறார். மார்ச் 25-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், மூன்று பேர் கூடி அவரை தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதோடு ராஜ் முத்து, லவ் ஷிண்டே மற்றும் கார்த்திக் அமீன் ஆகியோர் மீது வான்ராய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலை, triceps பயிற்சி செய்ய முயன்ற மிஷ்ராவிடம், அருகே இருந்த ராஜ் முத்து, ஒரு ரோப்பை கொடுக்கச் சொல்லியுள்ளார். மிஷ்ரா மறுத்ததும், அவரை திட்டிப் பின்னர் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். முத்து, இரும்புக் கம்பியால் மிஷ்ராவை தலையில் தாக்கியதால், பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த ஜிம்மின் பயிற்சியாளர் ஒருவர் தலையிட்டு மிஷ்ராவை காப்பாற்றினார். மிஷ்ரா கூறியதாவது: “என்னை தாக்க பயன்படுத்திய கம்பியை நான் சுட்டிக்காட்டி போலீசுக்கு கொடுத்தேன். ஆனால் தாக்கியவர்களின் முகவரிகள் கேட்கப்பட்டபோது ஜிம் நிர்வாகம் தெரியவில்லை என்றது.
அடையாள சான்றிதழ் இல்லாமலா இவர்கள் ஜிம்மில் வர அனுமதிக்கிறார்கள்?” என்றார். மேலும், “இந்த வழக்கில் ‘கொலை முயற்சி’ பிரிவும் சேர்க்கப்பட வேண்டியது, ஆனால் சேர்க்கப்படவில்லை,” என்றும் குற்றம் சாட்டினார். வான்ராய் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து மூவரையும் வரவழைத்து விசாரணை நடப்பதாக சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜு மாணே தெரிவித்தார்.