
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் பரமக்குடியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கு வாகன வசதியும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி பேருந்து வந்துள்ளது. அந்தப் பள்ளி பேருந்தில் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்துள்ளனர்.
அப்போது பேருந்து கமுதி- பார்த்திபனூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே பைக்கில் ஒருவர் வந்துள்ளார். அவர் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக பேருந்து ஓட்டுனர் வேகமாக பிரேக் அடித்ததால் பள்ளி பேருந்து நிலைத்தடுமாறி சாலையிலேயே கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த குழந்தைகள் பதற்றத்தில் அலறி அடித்துள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் பேருந்தின் உள் சிக்கிய குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 12 மாணவ மாணவிகளுக்கும் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.