கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று சமீப காலமாக ரஷ்யா முழுவதும் ஒரு மர்ம வைரஸ் பரவி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளதாகவும், இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் எனவும் கூறப்படுகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் பத்து நாட்களுக்கு மேல் படுத்த படுக்கையாக ஆகிவிடுகின்றனர் என தகவல்கள் பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதனை ரஷ்யா மருத்துவ அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, எந்தவித புது வைரசும் கண்டறியப்படவில்லை.

மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாச நோய் தொற்றுகள் தான் என தெரிவித்துள்ளனர். மேலும் சுவாசக் குழாய் தொற்று என்றும், அதன் அறிகுறிகள் தீவிரமடைந்தால் உடனே தீவிர சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். ஆனால்  இந்த புதுவகை தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் சமூக ஊடகங்களில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.