ரயில்வே நிலையங்களில் பாதுகாப்பு படை காவல்துறையினர் சட்ட விரோத சம்பவங்களை தடுப்பதற்காக தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரே மாதத்தில் ஒருவர் கிட்டத்தட்ட 25 முறை பயணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய போது சுற்றுலா ஏற்பாடுகள் செய்யும் தொழில் மேற்கொள்வதன் காரணமாக அதிகம் ரயில்களில் பயணம் செய்வதாக கூறினார்.

ஆனால் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை கேட்டதும் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த நபரை பிடித்து  காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி  விசாரணையில், அந்த நபர் சம்பால் மாவட்டத்தை சேர்ந்த  மித்ரபால் என்பது தெரியவந்தது. பயணிகளின் செல்போனை திருடுபவர் என்பதும் தெரிய வந்தது. அவரது பையை சோதனை செய்தபோது பல மாடல் மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.

இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், சட்டப்படி முறையாக டிக்கெட் எடுத்து ரயிலில் பயணம் செய்து பயணிகளுடன் நல்ல முறையில் உரையாடி நெருக்கமாகி பின்னர்  அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர்களது மொபைல் போன்கள் மற்றும் சில மதிப்புள்ள பொருள்களை திருடிவிட்டு அங்கிருந்து சென்று விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதன் பின்னர் திருடிய பொருட்களை நல்ல விலைக்கு வெளியில் விற்றுவிடுவதும்  தெரியவந்தது. மேலும் மித்ரபால் மீது பல்வேறு ரயில்வே காவல் நிலையங்களில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் நீண்ட நாட்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.