ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நிலம் தொடர்பான பிரச்சனையில் பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அப்போது அதிலிருந்து தப்பிக்க முயன்ற அவர் அருகில் உள்ள ஒரு கடைக்குள் சென்றார். ஆனாலும் அவரை தொடர்ந்து விரட்டி சென்ற அந்த மர்ம நபர் கடைக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்.

இந்த காட்சிகள் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவான நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து சோனிபட் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . அதன்படி முதற்கட்ட விசாரணையில் நிலம் தொடர்பான பிரச்சனையால் இந்த தாக்குதல் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் குற்றவாளியை பிடிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் கூடுதல் தகவல்கள் வெளிவரும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.