திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியில் சுதந்திர போராட்ட தியாகியான கிருஷ்ணசாமி (100) என்பவர் வசித்து வருகிறார். நேற்று கிருஷ்ணசாமி தேசியக்கொடியுடன் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த தாசில்தார் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர், தான் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மனைவி, மகளுடன் வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில், சாலையோரம் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறேன்.

கடந்த 1996-ஆம் ஆண்டு வரை அதே இடத்தில் வீடு கட்டி குடியிருந்தோம். அப்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இந்த இடத்தை புறம்போக்கு நிலம் என்று கூறினர். மேலும் எனது வீட்டை இடித்துவிட்டனர். இருப்பினும் அதே இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். எனவே அந்த இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், பட்டா கேட்கும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்பதால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று வாங்கி வந்தால் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கிருஷ்ணசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.