இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், வெற்றி வீரருமான பேன் ஸ்டோக்ஸ், தற்போது தனது காலில் ஏற்பட்டுள்ள நரம்புக்காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்குப் பிறகு மது அருந்துவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

“நான் மீண்டும் முழுமையாக களமிறங்கும் வரை மது அருந்த மாட்டேன்” என்று கூறியுள்ள அவர், இது தனது உடலை மீட்டெடுப்பதற்கு மிகவும் முக்கியமான கட்டமாக அமைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசி வரும் பேன் ஸ்டோக்ஸ், “முதல் முறை பெரிய காயம் ஏற்பட்டபோது, அதன் பின்னர் இது எப்படி நடந்தது? என்று யோசித்தேன். சில நாட்களுக்கு முன்பு மது அருந்தியதே காரணமாக இருக்கலாமா?” என்ற எண்ணம் வந்ததாக தெரிவித்துள்ளார். இதே பேட்டியில் அவர், தன்னுடைய பழைய பழக்கங்களை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்ததாகவும், இதற்காக தனது வாழ்க்கை முறையை சீரமைக்கத் தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

தற்போது, பேன் ஸ்டோக்ஸ், மதுபானமற்ற ‘ஸ்பிரிட்ஸ்’ பிராண்டான CleanCo நிறுவனத்துடன் இணைந்து முதலீட்டாளரும் பிராண்ட் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஹண்ட்ரட் தொடரிலும், நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் காயம் ஏற்பட்ட ஸ்டோக்ஸ், மே 23ஆம் தேதி டிரென்ட் ப்ரிட்ஜில் நடைபெறும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ளார்.