சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது உணவு டெலிவரி பையனான லியூ, அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது ஆசிரியையை காதலித்து, 5 மாதங்களில் திருமணம் செய்து கொண்ட கதை, திரைப்படத்தைப் போலவே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த ஹாரிஸ், ஆங்கிலம் கற்பிக்க சீனாவின் ஷென்யாங் நகருக்கு வந்திருந்தார். ஒரு நாள், ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்தபோது, லியூ அவரது வீட்டுக்கு டெலிவரி செய்ய வந்தார்.
லிஃப்டில் இருவரும் முதல் முறையாக சந்தித்தபோது, லியூ ஆங்கிலத்தில், “ஹலோ, ஐ லவ் யூ” என்று சொன்னார். இதைக் கேட்டு ஹாரிஸ் சிரித்துவிட்டார். இந்த சிறிய உரையாடல், அவர்களின் காதல் கதையின் அடித்தளமாக அமைந்தது. பின்னர், இருவரும் தொலைபேசி எண்களைப் பரிமாறி, ஒருவருக்கொருவர் மொழி கற்க உதவினர்.
லியூ, ஹாரிஸுக்கு சீன மொழியையும், ஹாரிஸ், லியூவுக்கு ஆங்கிலத்தையும் கற்றுக் கொடுத்தனர். பேச்சு வார்த்தையின்போது, பூனைகள், உணவு, விளையாட்டு ஆகியவற்றில் இருவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருப்பதை உணர்ந்தனர், இது அவர்களின் உறவை மேலும் ஆழப்படுத்தியது.
இவர்களது காதல் பயணம் விடுமுறைகளில் கிராமங்களுக்கு சுற்றுலா செல்வதாகவும், ஜனவரியில் லியூ மெட்ரோ நிலையத்தில் மண்டியிட்டு வைர மோதிரத்துடன் ஹாரிஸுக்கு காதல் மனு வைத்ததாகவும் தொடர்ந்தது. “நேரம் குறைவாக இருந்தாலும், இவர் தான் என் வாழ்க்கைத் துணை என்று உணர்கிறேன்” என்று லியூ கூறினார். 2 மாதங்களில், லியூவின் சொந்த ஊரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஹாரிஸின் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து வீடியோ அழைப்பு மூலம் ஆசி வழங்கினர். “என்னிடம் வீடோ, காரோ இல்லை, ஆனால் ஹாரிஸுக்கு இவை பொருட்டல்ல; காதல் செல்வத்தால் அளவிடப்படுவதில்லை” என்று லியூ கூறுகிறார். திருமணத்துக்குப் பிறகும், இவர்கள் எளிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
மொழிபெயர்ப்பு செயலி மூலம் உரையாடி, மாலையில் மொழி கற்கிறார்கள். பட்ஸி என்ற அழகிய நாயுடன், லியூ அமெரிக்க உணவுகளையும், ஹாரிஸ் சீன உணவுகளையும் தயார் செய்கின்றனர். சைக்கிளிங்கும் அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. லியூ, தனது மனைவியுடன் சீனாவைச் சுற்ற விரும்புகிறார், அதேவேளை ஹாரிஸ் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவைப் பற்றி பேசுகிறார். இவர்களது காதல் கதை, உண்மையான அன்பு எவ்வளவு அழகாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது.
