
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 61 வயதான தொழிலதிபர் ஒருவர், வேலைக்கு வந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகியதை தொடர்ந்து, ஆபாச வீடியோ மூலம் மிரட்டப்பட்டு, ரூ.20 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், கனடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் தனது குடும்பத்தினரிடம் உண்மையை வெளிப்படுத்தி, காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலதிபர் பிச்சௌலி மர்தானா பகுதியில் பல்பொருள் அங்காடி மற்றும் வாடகைக் கடைகள் நடத்தி வருகிறார். இவரிடம் வைஷாலி என்ற பெண் வேலைக்காக வந்தபோது, அவர் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கிய தொழிலதிபர், பின்னர் அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.
ஒருநாள், வைஷாலி அவரை உஜ்ஜைனுக்கு அழைத்து சென்று, ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் அறை பதிவு செய்தார். அங்கு, தொழிலதிபரின் உணவில் போதை மருந்து கலந்து அவரை மயக்கத்தில் ஆழ்த்தி, அவருடன் சேர்ந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்துள்ளார்.
அதன்பிறகு, தொழிலதிபரை மிரட்டிய வைஷாலி, அவரது அனுமதியின்றி எடுத்த வீடியோவை காட்டி, பல்வேறு கட்டமாக பணம் வாங்கியுள்ளார். முதலில் தொழிலதிபர் ரூ.20 லட்சம் கொடுத்தாலும், வைஷாலி தொடர்ந்து மிரட்டலை நிறுத்தவில்லை. அந்த மிரட்டலால் மன அழுத்தத்துக்கு ஆளான தொழிலதிபர், தனது குடும்பத்தினரிடம் விபரங்களை தெரிவித்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் கனடா காவல் நிலைய போலீசார், வைஷாலிக்கு எதிராக மிரட்டல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது குற்றவாளி வைஷாலியின் இருப்பிடம் கண்டறியப்பட்டு வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என மண்டலம்-2 டிசிபி அபினய் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.