தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல முக்கியப் புதிய திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமான ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்குகள், அதிநவீன உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு மருத்துவ மையம் மற்றும் வீரர்கள் தங்குமிட வசதிகளுடன் இந்த மையம் ஒருங்கிணைந்த வளாகமாகத் திகழும். ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்ல இந்த மையம் மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்றார்.

இதனைத் தொடர்ந்து மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களைக் கவரும் வகையில், தமிழ்நாட்டில் ஒரு புதிய ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான பந்தயத்தடங்கள், ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 4 வரையிலான போட்டிகள் நடத்தும் வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இளைஞர்களின் திறமை வளர்க்கப்படுவதோடு, சுற்றுலா மற்றும் வாகனத் தயாரிப்புத் தொழில்களும் வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்புகள் பெருகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றோடு சேர்த்து மிக முக்கியமாக, சென்னையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய நவீன வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், பசுமைக் கட்டட தரநிலைகள்  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதுமான வாகன நிறுத்துமிடங்களைக் கொண்டிருக்கும். அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாகக் கூரையின் கீழ் கொண்டுவந்து, பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக இந்த நவீன நிர்வாக வளாகம் அமைக்கப்பட உள்ளது.