துலீப் கோப்பை 2026 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், கிரிக்கெட் உலகைக் கவர்ந்த இளம் சட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் இந்த இளம் வீரர், 159 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கித் துரத்திய ஆட்டத்தில் தனது அதிரடித் திறமையை வெளிப்படுத்தினார்.
முதல் இன்னிங்ஸில் வெறும் 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்து மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி, இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடக்கத்திலிருந்தே அபாரமான பார்மை வெளிப்படுத்தினார். அனுபவ வீரர் அபிமன்யூ ஈஸ்வரனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தார்.
ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி 37 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த அவர், ஆட்டத்தின் 14-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தாக்கூர் பந்துவீச்சில் தன் ரௌத்ர அவதாரத்தைக் காட்டினார். அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் பிரம்மாண்ட சிக்சரும் பறக்கவிட்ட அவர், தொடர்ந்து வந்த இரண்டு பந்துகளிலும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி முதல் 4 பந்துகளிலேயே 18 ரன்களைக் குவித்து மிரட்டினார்.
அதே ஓவரின் ஐந்தாவது பந்து டாட் ஆன நிலையில், ஆறாவது பந்திலும் பெரிய ஷாட் அடிக்க முயன்ற வைபவ், பவுண்டரி எல்லையில் ரஜத் படிதாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவர் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். இருப்பினும், அவர் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
முன்னதாக, காலிறுதிப் போட்டியில் வடக்கு மண்டலத்திற்கு எதிராக வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்திருந்த வைபவ் சூர்யவன்ஷி மீது ரெட்-பால் கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்க வேண்டிய பெரிய அழுத்தம் இருந்தது. ஆனால், இந்த அரையிறுதிப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அபாரமாக ரன் குவித்து, சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் தான் ஒரு மிரட்டலான வீரர் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக நிரூபித்துள்ளார்.
