கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் கிரிக்கெட் வரலாற்றில் அரிதாக மட்டுமே நடக்கக்கூடிய ஒரு நெகிழ்ச்சியான மற்றும் சிலிர்க்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. த்ரிசூர் டைட்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஏ.கே.அர்ஜுன், கடுமையான காயத்துடன் மைதானத்திற்குள் தள்ளாடி வந்து, கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து தன் அணியை த்ரில் வெற்றி பெறச் செய்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் த்ரிசூர் டைட்டன்ஸ் வெற்றி பெற கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல் எழுந்தது. ஷரான் எஸ் ஆட்டமிழந்த நிலையில், ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்த இடதுகை பேட்ஸ்மேன் ஏ.கே.அர்ஜுன் களத்திற்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கால் வலியால் சரியாக நடக்கக்கூட முடியாத நிலையில், தனது பேட்டையே ஒரு ‘ஊன்றுகோலாக’ பயன்படுத்திக் கொண்டு அவர் மைதானத்தை நோக்கி நொண்டி நொண்டி நடந்து வந்த காட்சியைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
Absolute Cinema in the Kerala Cricket League 💀🔥
– Trissur Titans needed 4 runs off the last ball.
– After losing their 6th wicket, injured AK Arjun, who was limping badly, came out to bat.
– Standing on one leg, he smashed a SIX to win the match! 🤯Bravery in Indian cricket… pic.twitter.com/AETEtRfroo
— Jara (@JARA_Memer) September 1, 2026
களத்திற்கு வந்த பிறகு சிறிதும் பதற்றமடையாமல் தனது கவனத்தை ஒருங்கிணைத்த அர்ஜுன், பந்துவீச்சாளரின் பந்தைத் துல்லியமாக எதிர்கொண்டு பவுண்டரி எல்லைக்கு அப்பால் சிக்சருக்குப் பறக்கவிட்டார். இந்த அற்புதமான ஷாட் மூலம் த்ரிசூர் டைட்டன்ஸ் அணியை அவர் த்ரில் வெற்றி பெறச் செய்தார். சக வீரர்களின் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்ட இந்த வியத்தகு வெற்றி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் கேதார் ஜாதவ் செய்த சாகசத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது. அன்றைய போட்டியில் காயம் காரணமாக அவதிப்பட்ட ஜாதவ் களமிறங்கி சிஎஸ்கே அணியை வெற்றி பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்பாராத மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் த்ரிசூர் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.
