பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் குறித்த பகீர் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் தீயாய் பரவி வருகின்றன. இமாத் வாசிமின் முன்னாள் மனைவியான சானியா அஷ்பாக், அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குடும்ப அழுத்தத்தால் தமக்கு ஏற்பட்ட துயரங்கள் குறித்தும் பல திடுக்கிடும் தகவல்களை போட்டுடைத்துள்ளார்.

பிரபல யூடியூப் சேனலில் கலந்துகொண்டு பேசிய சானியா, இமாத் வாசிம் மீது பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தங்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டில் தான் மூன்றாவது முறையாகக் கர்ப்பமானதாக அவர் தெரிவித்தார். இந்தச் செய்தியைக் கேட்டவுடன் இமாத் ஆரம்பத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும், தனது தாயின் அழுத்தத்திற்குப் பிறகு நிலைமை முற்றிலுமாக மாறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்ப்பம் குறித்த செய்தியை இமாத் தனது தாயிடம் போனில் தெரிவித்தபோது, எதிர்முனையில் இருந்த அவரது தாய் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சானியா வேதனையுடன் தெரிவித்தார். “என் தாய்க்கு வாழ்த்துகள் சொல்லத் தோன்றவில்லை. அந்தப் பெண்ணைக் கருவைக் கலைக்கச் சொல். இல்லாவிட்டால் நான் அவளுக்கு விஷம் வைத்துக் கொன்றுவிடுவேன்” என்று இமாத்தின் தாய் மிரட்டியதாக சானியா கண்ணீர் மல்ஹரக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அந்தச் சூழலில் எனக்கு ஆதரவாக யாருமே இல்லை. என் குழந்தைகளும் என்னுடன் சேர்ந்து அழுதார்கள். மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா அல்லது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. என்னை அமைதிப்படுத்த ஊசி போடுவதாகக் கூறி மயக்க மருந்து கொடுத்துவிட்டனர். நான் கண் விழித்துப் பார்த்தபோது, எனது கர்ப்பம் கலைக்கப்பட்டிருந்தது” என்று தழுதழுத்த குரலில் பகிர்ந்து கொண்டார். சானியாவின் இந்த நேர்காணல் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே பேட்டியில், கடந்த 2024 டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி எளிதில் ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தில் கோட்டை விட்டுக் தோற்றது குறித்தும் சானியா கருத்து தெரிவித்துள்ளார். “இந்திய அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றது இமாத்திற்கு இறைவன் அளித்த தண்டனை என்றே நான் கருதுகிறேன். நீங்கள் கொன்ற அந்த அப்பாவிக் குழந்தைக்காகக் கடவுள் உங்களுக்கு அளித்த சாபம் தான் இந்தத் தோல்வி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இமாத் வாசிம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பாகிஸ்தான் அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளிலும், 75 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் மைதானத்தில் கலக்கிய இந்த வீரரின் குடும்ப வாழ்க்கை தொடர்பான இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் தலைகுனிவையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.