கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அடுத்த அதிரடி மோதலுக்கு நேரம் நெருங்கிவிட்டது. வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட பரபரப்பான டி20 தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளுமே தில்லியின் பிரபல அருண் ஜெட்லி மைதானத்தில் கோலாகலமாக நடைபெறுகின்றன. போட்டிகளை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தினாலும், மைதானம் நம் நாட்டின் தலைநகரில்தான் அமைந்துள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அணியின் தலைமைப் பொறுப்பு அதாவது கேப்டன் பதவியானது நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயரிடமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள அணியின் முக்கிய ஹைலைட் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குக் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பாகும். அதேசமயம், கடந்த காலத்தில் ஜிம்பாப்வே தொடரிலிருந்து திடீரென கழட்டிவிடப்பட்டு கடும் விமர்சனங்களைச் சந்தித்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், இப்போது அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் தொடக்க வீரர்களுக்கான போட்டி கடுமையாகியுள்ளதுடன், பிளேயங் லெவனில் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
India’s squad for Afghanistan T20I series announced. #TeamIndia will play three T20Is against Afghanistan at New Delhi, beginning September 13.#AFGvIND pic.twitter.com/UqTUeZyHz8
— BCCI (@BCCI) September 1, 2026
மறுபுறம், அணியில் இடம்பெற்றுள்ள நான்கு முக்கிய வீரர்களின் பெயர்களுக்கு அருகில் நட்சத்திரக் குறியீடு இடப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய இந்த நான்கு வீரர்களும் அண்மைக் காலத்தில் காயத்தால் அவதிப்பட்டு வந்தவர்கள். எனவே, இவர்களின் முழுமையான ஃபிட்னஸ் சான்றிதழ் கிடைத்த பின்னரே அவர்கள் போட்டிகளில் களமிறங்குவது உறுதியாகும்.
இந்த நிலையில் முதல் டி20 போட்டி செப்டம்பர் 13-ல் நடைபெறுகிறது. இரண்டாவது டி20 போட்டி செப்டம்பர் 15-ம், மூன்றாவது டி20 செப்டம்பர் 17 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்திய அணி விவரம்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா (துணைக்கேப்டன்), சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர்*, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா*, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா*.
