‘அருவி’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைத்து, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. கடந்த 2024-ஆம் ஆண்டில் தனது நீண்ட நாள் காதலி பூஜாவைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில் அழகிய குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், தன் மனைவியை விட்டுப் பிரிவதாகவும், குழந்தையைப் பிரிந்து வாடுவதாகவும் பிரதீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவானது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் இணைய உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது “தாடி பாய்” எனும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்கில் மனம் திறந்து பதிவிட்டுள்ள பிரதீப் ஆண்டனி, தான் தவறான ஒரு நபரைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அதனால் ஒவ்வொரு நாளும் நரகத்தை அனுபவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் திருமண வாழ்க்கையில் நிம்மதியாக மூச்சுவிடக்கூட முடியவில்லை என்றும், குழந்தையின் பிரிவும் தன்னை மனதளவில் படுத்தி எடுப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் வேதனையுடன் விவரித்துள்ளார். மேலும், சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோருடன் வளருவதை விட, தன் தாயுடன் குழந்தை இருப்பது நல்லது என்று கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் அதில் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதீப்பின் இந்த அதிரடியான மற்றும் உருக்கமான விவாகரத்து அறிவிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன. பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வரும் அதேவேளையில், இது போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பகிர்வதைத் தவிர்க்குமாறும், அவருக்குத் தேவையான மருத்துவ அல்லது மனநல ரீதியான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இணையவாசிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது தமிழ்சினிமா உலகில் ஹாட் டாப்பிக்காக மாறி விவாதிக்கப்பட்டு வருகிறது.
