ஸ்மார்ட்போனில் இணைய வேகம் குறைவாக இருக்கும்போது, சிம் கார்டை மாற்றினால் 5ஜி வேகம் அதிகரிக்குமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனால், சிம்மை மாற்றுவதால் மட்டுமே 5ஜி வேகம் அதிகரித்துவிடும் என்று கூறிவிட முடியாது.

உங்கள் சிம் கார்டு மிகவும் பழையதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ இருந்தால், புதிய நெட்வொர்க் அம்சங்களை அது ஆதரிக்காமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், புதிய சிம் கார்டை வாங்குவது நெட்வொர்க் இணைப்பையும் இணைய வேகத்தையும் மேம்படுத்த உதவும்.

ஆனால், உங்கள் பகுதியில் நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சிக்னல் மிகவும் குறைவாக இருந்தால், சிம் கார்டை மாற்றினாலும் இணைய வேகப் பிரச்சனை தீராது. ஏனெனில், பிரச்சனை உங்கள் சிம்மில் இல்லை; அங்குள்ள நெட்வொர்க் டவரில் உள்ளது.

உண்மையில் 5ஜி இணைய வேகம் என்பது உங்கள் மொபைலில் உள்ள 5ஜி பேண்டுகள் அப்பகுதியின் நெட்வொர்க் கவரேஜ், டவரின் திறன், நெட்வொர்க் அடர்த்தி மற்றும் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா பிளான் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.

எனவே, ஏற்கனவே 4ஜி அல்லது 5ஜி ஆதரவு கொண்ட நல்ல நிலையிலிருக்கும் சிம் கார்டை மாற்றுவது பெரிய அளவில் வேகத்தை அதிகரிக்காது. நெட்வொர்க் அமைப்புகளைச் சரிபார்ப்பதே இணையப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வாகும்.