சீனா தனது ராணுவப் படைகளை கையாள்வது தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய விதிகளின்படி, பிற நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பதிலடி நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு முறையும் அதிபரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இருக்காது. களத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது மட்டத்தில் முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவப் படை நிலைநிறுத்தம் தொடர்பான சட்டத்தில் சீனா மாற்றம் கொண்டுவந்துள்ளது. 82 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய சட்டத்தில், அதிபர், ராணுவத் தலைமை மற்றும் போர்முனையில் பணியாற்றும் வீரர்களின் அதிகாரங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பதிலடி நடவடிக்கைகளுக்கான முடிவெடுக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் அதன் விவரங்களை அதிபர் மற்றும் சட்டமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
போர் சூழல் ஏற்பட்டால் சமூக ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க புதிய விதிகள் வழிவகுக்கின்றன. தவறான தகவல்கள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூக ஊடக தளங்களை கட்டுப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கும் ராணுவத்துக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போர்க்காலத்தில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு கட்டமைப்பு, எரிசக்தி, சுகாதாரம், உணவு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடுகளிலும் ராணுவம் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியும்.
தைவான், ஜப்பான் மற்றும் பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பிராந்திய பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனாவின் இந்த புதிய ராணுவ விதிகள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. போர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை ராணுவத்தில் சேர்க்கக் கூடாது என்றும் புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் சீனாவின் போர்க்கால நிர்வாகம் மற்றும் ராணுவ முடிவெடுக்கும் நடைமுறையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பார்க்கப்படுகிறது.
