சீனாவில் நாளுக்கு நாள் குறைந்து வரும் திருமண எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கமும் உள்ளூர் நிர்வாகமும் பொதுமக்களை வியக்க வைக்கும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வழக்கமான அரசு அலுவலகங்களைத் தாண்டி, இளைஞர்களை எளிதில் ஈர்க்கும் நோக்கில் மருத்துவமனைகள், வங்கிகள், விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ஏன் ஒரு நைட் கிளப் போன்ற இடங்களிலும் கூட தற்பொழுது மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்சர்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய விசித்திரமான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனை தம்பதிகளுக்குத் திருமணப் பதிவுடன் சேர்த்து மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. அதேபோல், தியான்ஜின் நகரில் உள்ள ஒரு வங்கியின் கிளையிலும், ஷாங்காயில் உள்ள ஒரு பார்ட்டி நடக்கும் நைட் கிளப்பிலும் கூட தம்பதிகள் தங்களது திருமணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கம் இவ்வளவு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் முறைகளை மாற்றினாலும் கூட, இளைஞர்களின் மத்தியில் திருமணம் செய்துகொள்ளும் ஆர்வம் பெரிதாக அதிகரிக்கவில்லை என்பதே தற்போதைய புள்ளிவிவரங்கள் உணர்த்தும் உண்மையாக உள்ளது.
நாட்டில் தொடர்ந்து சரிந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற எதிர்காலப் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கவே அரசு இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளது. இருப்பினும், முறைகளை எளிதாக்குவதை விட வேலைவாய்ப்பு, வீடுகளின் விலை உயர்வு, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற அடிப்படைச் சுமைதான் இளைஞர்களைத் திருமணத்திலிருந்து விலக்கி வைக்கிறது என்று சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையேயும் கடுமையான விவாதங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
