இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடுவருமான ஜவகல் ஸ்ரீநாத் பெங்களூரு மெட்ரோ ரயிலில் சாதாரண பயணியைப் போல பயணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆகஸ்ட் 29-ஆம் தேதி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் புகைப்படத்தை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், ஸ்ரீநாத்தின் எளிமையைப் பாராட்டி வருகின்றனர்.

ஒருகாலத்தில் தனது அதிவேகப் பந்துவீச்சால் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களையே திணறடித்த ஸ்ரீநாத், மெட்ரோ ரயிலில் சாதாரண உடையில் கையில் பயணப் பையுடன் நின்றபடி காணப்பட்டார். எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் சக பயணிகளைப் போலவே அவர் பயணம் செய்த காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையடுத்து அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

ஸ்ரீநாத்தின் எளிமை ரசிகர்களுக்கு புதிதல்ல. இதற்கு முன்பும் மைசூரு ரயில் நிலையத்தில் முதுகுப்பையுடன் சாதாரணமாக ரயிலுக்காகக் காத்திருந்த அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது மெட்ரோவில் பயணம் செய்துள்ள புகைப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், தனது இயல்பான வாழ்க்கை முறையை அவர் தொடர்ந்து கடைப்பிடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மைசூரைச் சேர்ந்த ஜவகல் ஸ்ரீநாத், இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளையும், 229 ஒருநாள் போட்டிகளில் 315 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 1992 முதல் 2003 வரையிலான நான்கு உலகக் கோப்பை தொடர்களிலும் இந்திய அணிக்காக விளையாடிய அவர், பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார். அவரது சமீபத்திய மெட்ரோ பயணம், சாதனை படைத்தவராக இருந்தாலும் எளிமையாக வாழ்வதே அவரது சிறப்பு என்பதை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளது.