பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதியின் வரலாற்றைக் கூறும் பகுதிகளில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் திடீரென நீக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஆவணங்களில் இருந்து தலைவர்களின் பெயர்களை அதிரடியாக நீக்கியுள்ள இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், பிரபல சினிமா இயக்குநரான அமீர் இதற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

பெரியார், அண்ணா மற்றும் அம்பேத்கர் போன்ற ஆளுமைகள் வெறும் சாதாரண பெயர்கள் அல்ல என்றும், அவை தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அடையாளங்கள் என்றும் இயக்குநர் அமீர் தனது கண்டனத்தில் குறிப்பிட்டுள்ளார். சமூக நீதிக்காகப் போராடிய இந்தத் தலைவர்களின் வரலாற்றையும் அவர்களின் பங்களிப்பையும் மறைக்கவோ அல்லது அழிக்கவோ எந்தவொரு சக்தியும் எந்த முகமூடியுடன் வந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்தி எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அரசுத் துறைக் குறிப்பேடுகளில் இருந்து சமூகநீதித் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது குறித்துப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் இடஒதுக்கீட்டு வரலாைரப் பாதுகாப்பதற்காகவும் போராடியவர்களின் பெயர்களை நீக்குவது சமூக நீதிக்கு இழைக்கப்படும் அவமானம் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருவதால், இப்பிரச்சினை தற்போது தமிழக அரசியல் வட்டட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.