உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் குடிபோதையில் தன் சொந்த தாய்க்கே பாலியல் தொல்லை கொடுத்த மகனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள  கிராமம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் இரவு 63 வயது மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவரது 25 வயது இளைய மகன், தன் தாயைக் பலவந்தப்படுத்தி இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான். தாயின் நிலையைப் பொருட்படுத்தாமல் அத்துமீறிய அவன், உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

இந்தக் கொடூரம் குறித்து அறிந்த மூதாட்டியின் மூத்த மகன், உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மகனைத் தேடிப் பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து சிகந்தரா ராவ் வட்ட காவல்துறை அதிகாரி அமித் பதக் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மூதாட்டி உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பூர்வ நடைமுறைகளின்படி உரிய விசாரணையும் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளானோரின் தனியுரிமையைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட தாயின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.