இயற்கையின் பேரழிவு அச்சுறுத்தலைத் தன் கோர முகத்துடன் காட்டும் வகையில், பிரம்மாண்டமான பனிப்பாறை ஒன்று கண்சிமிட்டும் நேரத்தில் சரிந்து கொடூரமாகக் நொறுங்கி விழும் அதிர்ச்சி வீடியோ ட்ரோன் கேமராவில் தத்ரூபமாகப் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலை உச்சியிலிருந்து டன் கணக்கிலான பனிக்கட்டிகள் மற்றும் பாறைகள் கட்டுக்கடங்காத வேகத்தில் சரிந்து விழும் அந்தத் திகிலூட்டும் காட்சிகள், இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனித சக்தி எவ்வளவு சிறியது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

இந்த விபரீதச் சம்பவமே அதைத் தொடர்ந்து நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் கரைபுரண்டு ஓடிய பேரழிவு வெள்ளப் பெருக்குக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ட்ரோன் கேமராவில் பதிவான அந்தக் காட்சியில், அமைதியாக இருந்த மலைப்பகுதியில் திடீரெனப் பெரும் பனிப் பிளவு ஏற்பட்டு, மலைச் சிகரத்தின் ஒரு பகுதியே பெயர்ந்து கீழே சரிந்து விழுகிறது.

பனிப்பாறைகள் நொறுங்கிப் பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்து வரும்போது எழுந்த பனிப் புயலும் அதன் பயங்கரச் சத்தமும் காண்போரின் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு ராட்சதப் பனிப்பாறைகள் சரிந்து நதிகளில் விழுந்ததால், நீரோட்டம் உடனடியாகத் தடைபட்டு, குறுகிய காலத்தில் பனி உருசிய நீருடன் பேரளவு வெள்ளமாக மாறி அடிவாரப் பகுதிகளை நோக்கி சீறிப்பாய்ந்துள்ளது.

இந்த பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு, நேபாளம் மற்றும் திபெத் ஆகிய இரு பகுதிகளின் எல்லை கிராமங்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் அடியோடு சின்னாபின்னமாக்கியுள்ளது. வீடுகள், பாலங்கள் மற்றும் முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இதுபோன்ற பேராபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், ட்ரோனில் பதிவான அந்தப் பேரழிவு வீடியோ இணையத்தில் வைரலாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.