ஐபிஎல் 2026 தொடருக்குப் பின் இந்திய டெஸ்ட் அணியின் பயணம் மிகச் சிறப்பாகத் தொடர்ந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இப்போது அடுத்த 3 மாத இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணியின் அடுத்த பெரிய டெஸ்ட் சவால் நியூசிலாந்து மண்ணில் காத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷி தொடரின் ஒரு பகுதியாக, நவம்பர் 19 முதல் தொடங்கும் இந்தத் தொடரில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. சுப்மன் கில் தலைமையில் நியூசிலாந்து செல்லும் இந்த அணியில் இருந்து, சில முக்கியக் காரணங்களால் 4 வீரர்கள் விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதாவது அங்குள்ள வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானவை என்பதால், அந்த நிலைமைக்கு ஏற்ப அணித் தேர்வு இருக்கும்.
அதன்படி இலங்கைக்கு எதிராகச் செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் மற்றும் டெஸ்ட் அறிமுகமான சாராந்த் ஜெயின் ஆகியோருக்கு நியூசிலாந்து பிட்சுகளில் வாய்ப்பு கிடைப்பது கடினம். ரவீந்திர ஜடேஜா மற்றும் காயத்திலிருந்து திரும்பும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெறுவது உறுதி என்பதால், இவர்கள் இருவரும் அணியிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவின் காயம் காரணமாக இலங்கைத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி, பிட்சின் சூழ்நிலை மற்றும் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் வருகையால் அணியில் இடம்பிடிக்கக் போராட வேண்டியிருக்கும். ஹர்ஷித் ராணா மற்றும் குர்னூர் பிரார் போன்றோரும் முன்னுரிமை பெறக்கூடும்.
மேலும் நியூசிலாந்து மண்ணின் கடுமையான ஸ்விங் மற்றும் பவுன்ஸ் பந்துவீச்சுக்குத் தகுந்தபடி பேட்டிங் செய்ய சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்குவது சந்தேகமே. அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டிக்கு அணி நிர்வாகம் வாய்ப்பளிக்க அதிக வாய்ப்புள்ளது.
