இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானின் மகன்களான சுலைமான் மற்றும் காசிம் கான் ஆகியோர் ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தெர்ட்டன் எடுத்த இந்த நேர்காணல், கிரிக்கெட் உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் அனலைக் கிளப்பிய நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது இதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார்.
இம்ரான் கானின் மகன்கள் அளித்த இந்த நேர்காணல் குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தியைத் தெரிவித்ததாகவும், விவாதங்கள் நடந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இருப்பினும், இந்த விவகாரம் குறித்துப் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது, தனக்கும் அணிக்கும் இந்த சர்ச்சைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகப் கூறிவிட்டார்.
View this post on Instagram
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சர்பராஸ், “எனக்கு இதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் தற்போது ஆட்டத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறி, அணியின் கவனத்தைத் திசைதிருப்ப விரும்பவில்லை என்றார்.
இந்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்டால் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்திற்குச் செல்ல மறுக்கத் திட்டமிட்டிருந்ததாக வெளியான வதந்திகளையும் சர்பராஸ் முற்றிலுமாக மறுத்தார். “இல்லை, இல்லை, இல்லை, இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்த அவர், வீரர்களுக்கு இந்த விவகாரம் குறித்து எதுவுமே தெரியாது என்றும், ஒளிபரப்பின் போது அவர்கள் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள் என்றும் விளக்கமளித்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தை இம்ரான் கானின் தற்போதைய நிலை மற்றும் அவரது பாதுகாப்பு குறித்த கவலைகளை அந்த நேர்காணலில் அவரது மகன்கள் வெளிப்படுத்தியிருந்தனர். இங்கிலாந்தில் இந்தச் செய்தி ஒளிபரப்பானாலும், பாகிஸ்தானின் பொது ஒளிபரப்பு நிறுவனம் இதனைத் தவிர்க்கும் வகையில் விளம்பரங்களை மட்டுமே ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. அனைத்துச் சர்ச்சைகளையும் தாண்டி, பாகிஸ்தான் அணி திட்டமிட்டபடி தனது டெஸ்ட் ஆட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
