குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் சொகுசு காரை ஆபத்தான முறையில் அதிவேகமாக இயக்கிய வணிக விமானி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இன்ஸ்டாகிராம் வீடியோவின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தின் முக்கியச் சாலைகளில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பகுதியில் போர்ஷே’  ரக சொகுசு கார் ஒன்று கண்மூடித்தனமான வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்த விபரீத பயணம் குறித்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வைரலாகியுள்ளது. அதில் கார் மணி நேரத்திற்கு 110 முதல் 300 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகளைப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் செயல் பொதுமக்களின் பாதுகாப்பிற்குக் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவைக் கவனத்தில் கொண்ட துணை காவல் ஆணையர்  ஹர்ஷாத் படேல் மற்றும் உதவி காவல் ஆணையர் ஹெச்.எம். கன்சக்ரா ஆகியோர் உடனடியாகக் காரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி  போலீசார்  அப்பகுதியில் உள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையின் முடிவில், காந்திநகர் மாவட்டம் லிம்ப்டியா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வணிக விமானியான மொஹம்மது அக்ரான் திர்மிசி என்பவர்தான் காரை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அந்தப் போர்ஷே சொகுசு காரைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.