நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள கோரமான ப்ளாஷ் ஃபிளட் எனப்படும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்த தனது வீட்டின் கூரை மீது ஏறி நின்று கொண்டு, ராணுவ ஹெலிகாப்டரை நோக்கித் தனது டீ-ஷர்ட்டை ஆட்டி உதவி கோரிய இளைஞர் ஒருவரை நேபாள ராணுவத்தினர் வியத்தகு முறையில் பத்திரமாக மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தத் திடீர் இயற்கைச் சீற்றத்தினால் இதுவரை குறைந்தது 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவால் வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட மொத்தம் 384 பேர் என்ன ஆனார்கள் என்ற விபரம் தெரியாமல் மாயமாகியுள்ளனர். இதில் 105 இந்தியர்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. போதே கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கு மற்றும் பனிச்சரிவு காரணமாகவே இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.

சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால், சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஹெலிகாப்டர்கள் மட்டுமே தற்பொழுது பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆபத்தான சூழ்நிலைகளிலும் துணிச்சலுடன் களமிறங்கி மக்களை மீட்டுவரும் நேபாள ராணுவத்தினரின் செயலுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.