சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் பகுதியில் அமைந்துள்ள சாங்லு சுற்றுலா மற்றும் ஓய்வுப் பூங்காவிற்குச் சென்ற பெண் ஒருவர், அங்குள்ள ஆப்பிரிக்க ஸ்புர்ட் வகையைச் சேர்ந்த உயிருள்ள பெரிய ஆமையின் மீது சிறிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஏறி நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்வையாளர்கள் ஆமைகளின் மீது ஏறக்கூடாது என்று தெளிவாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் நடந்து கொண்டதுடன், அருகில் இருந்த மற்றொரு சிறுவனையும் அதன் மீது ஏறுமாறு உற்சாகப்படுத்தியுள்ளார்.
Visitors caught riding & kicking tortoise at China Park… 😡😡 pic.twitter.com/1r0oDeslNk
— The Daily Decode (@Sciencedecod) August 25, 2026
இந்தச் செயலின் போது அந்த ஆமை தனது எடையைத் தாங்க முடியாமல் தவித்து ஊர்ந்து செல்ல முயன்றதைக் கண்டு அந்தப் பெண் மேலும் மகிழ்ச்சியடைந்து சிரித்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இதற்குத் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், அங்குப் பணியில் இருந்த ஊழியர்கள் யாரும் உடனடியாகத் தடுத்து நிறுத்தாதது குறித்து பூங்கா நிர்வாகத்தின் பாதுகாப்புப் பணிகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.
இந்த விவகாரம் பூங்கா நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அந்த ஆமைக்கு உடனடியாக விலங்கு மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் ஆமை நல்ல உடல்நலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆமைகளின் ஓடுகள் வெறும் மேல்தோல் அல்லாமல் அவற்றின் முதுகு எலும்பு மற்றும் நரம்புகளுடன் இணைந்திருப்பதால், மனிதர்களின் அதிகப்படியான எடை அவற்றின் உள் உறுப்புகளையும் எலும்புகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
