அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ்-இப்சோஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. ஈரானுடனான நீடித்த மோதலில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அந்தப் போருக்கு அமெரிக்க மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 1,215 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு 31 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இந்த ஆதரவு 37 சதவீதமாகவும், இந்த மாத தொடக்கத்தில் 34 சதவீதமாகவும் இருந்தது. இதனால் டிரம்ப் நிர்வாகத்துக்கு உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
கருத்துக்கணிப்பில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் 69 சதவீதம் பேர் ஈரானுக்கு எதிரான போருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 77 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக குடியரசுக் கட்சியினரிடையே போருக்கான ஆதரவு குறைந்திருப்பதே ஒட்டுமொத்த ஆதரவு சரிவுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க மக்களில் 83 சதவீதம் பேர் ஈரானுடனான மோதல் இன்னும் நீண்ட காலத்துக்கு தொடரும் என்று கருதுகின்றனர். இந்த எண்ணிக்கை இந்த மாத தொடக்கத்தில் 80 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது மேலும் உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் தற்போது நடைபெற்றால் சுயேச்சை வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு அதிக ஆதரவு அளிப்பார்கள் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஜனநாயகக் கட்சிக்கு 33 சதவீதமும், குடியரசுக் கட்சிக்கு 19 சதவீதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நீண்டகால ராணுவ மோதல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை டிரம்ப் முன்வைத்திருந்தார். ஆனால் தற்போது ஈரானுடனான போர் நீடித்து வரும் நிலையில், அவரது மக்கள் செல்வாக்கு சரிவை சந்தித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் அமெரிக்க அரசியலில் டிரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈரானுடனான போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்காவில் பெட்ரோல் விலை போர் தொடங்குவதற்கு முந்தைய காலத்தைவிட ஒரு கேலனுக்கு ஒரு டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் போரின் பொருளாதார தாக்கமும் அமெரிக்க மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, ஈரான் ஆட்சியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆயுத கொள்முதல், இணைய ஊடுருவல்கள் மற்றும் சட்டவிரோத எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது அமெரிக்கா புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் சர்வதேச நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் வலியுறுத்தியுள்ளார்.
