சென்னை புழல் சந்திப்பு. வாகனங்கள் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்த அந்தப் போக்குவரத்து நெரிசலில் இளம்பெண்கள் போதையில் ரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டியில் இருந்து ஆவேசமாக கீழே இறங்கிய ஒரு இளம்பெண், தனது தலைமுடியை வாரி சுருட்டி கட்டிக்கொண்டு நேராகக் ‘கோதாவில்’ இறங்கினார். “ஏய்… என் வண்டியையே இடிச்சிட்டியா? யார்டா நீ?” என்று அவர் நடுரோட்டில் நின்று வெடித்தார். இடி வாங்கிய வாகன ஓட்டியோ, “எம்மா, இடிச்சது நீங்க… பழி என் மீதா?” என்று பரிதாபமாகத் தன் வண்டியை நகர்த்த முயன்றார். ஆனால், ஆவேசம் குறையாத அந்தப் பெண்களோ நடுரோட்டின் நடுவே நின்று, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வாகனங்களை வழிமறித்தனர்; பேட்டை ரவுடிகளைப் போல ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
வழியாக வந்த ஒரு லாரியைப் பார்த்ததும், “ஏய் இடிச்சுடுவியா நீ… இடிச்சுட்டு போ பார்க்கலாம்” என்று சவால் விட்டபடி அவர்கள் செய்த சேட்டையால், நெடுந்தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்களில் சிலர் அவர்களைச் சமாதானப்படுத்த அருகில் சென்றனர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு உண்மையான அதிர்ச்சி காத்திருந்தது—அந்தப் பெண்கள் மிதமிஞ்சிய போதையில் இருப்பது அப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்தது.
“எந்த ஊரா? Foreign பக்கத்துல Dubai!” சென்னை புழல் அருகே போதையில் நடுரோட்டில் இளம்பெண்கள் அட்டகாசம்.. போலீசார், பொதுமக்களிடம் ஆபாச பேச்சு!
Chennai | Puzhal | Viral Video | Police #NewsTamil24x7 #GirlsAtrocity #NewsReport pic.twitter.com/mXLEXYYeg3
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) August 24, 2026
ஒருவர் அவர்களைப் பார்த்து, “வண்டியை ஓரங்கட்டுங்கள்” என்றார். அதற்கு அந்தப் பெண்களோ கொந்தளித்து, “என்னய்யா சொல்ற… என் ஊராக இருந்தால் சீனே வேற…” என்று முறைத்தனர். “உங்களுக்கு எந்த ஊரும்மா?” என்று அங்கிருந்தவர்கள் கேட்க, “என் ஊரு துபாய் தெரியுமா?” என்றார் கம்பீரமாக. இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அங்கிருந்த ஒருவர் அவரது கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அறை விட்டார்.
அருகில் நின்ற போக்குவரத்து காவலரும் நிலைமை கைமீறிச் செல்வதைக் கண்டு தவித்தபடி சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அந்தப் பெண்களோ போலீசாரையும் விட்டுவைக்கவில்லை; கேட்க முடியாத வார்த்தைகளால் வசைபாடினர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அந்தப் காவலர், உடனடியாக மற்ற போலீசாரின் உதவியை நாடினார்.
போலீசார் விரைந்து வந்து, அந்த இரண்டு பெண்களையும் அவர்களுடன் வந்த ஒரு வாலிபரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் தொடக்கத்தில் அவர்கள் எவரும் தன்நிலையில் இல்லை என்பது தெரியவந்தது. பிடிபட்டவர்களில் ஒரு பெண்ணுக்கு 17 வயது மற்றொரு பெண்ணுக்கு 18 வயது என்பது கண்டறியப்பட்டது. போதை முழுமையாகத் தெளிந்த பிறகு உரிய விசாரணை நடத்தலாம் என முடிவு செய்த போலீசார், அவர்களை மகளிர் காவல் துறையின் பாதுகாப்பில் வைத்தனர்.
