திரைத்துறையின் பிரம்மாண்டத்திற்கும் பளபளப்பிற்கும் பின்னால் ஒளிந்திருக்கும் கறுப்புப் பக்கங்கள், அவ்வப்போது வெளியாகி ஒட்டுமொத்தச் சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தத் தவறுவதில்லை.
அந்த வகையில், இந்தித் திரையுலகில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனது உருவ ஒற்றுமையால் ‘சின்ன அமிதாப்’ என்றே புகழ்பெற்ற முன்னாள் குழந்தை நட்சத்திரமான ரவி வலேச்சா தான் சிறுவயதில் சினிமா படப்பிடிப்புத் தளங்களில் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து தற்பொழுது பல தசாப்தங்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு சுமார் 8 வயதாக இருக்கும்போதே படப்பிடிப்புத் தளங்கள், டப்பிங் தியேட்டர்கள் மற்றும் வெளிப்புறப் படப்பிடிப்புகளின் போது இந்த கொடூரமான அனுபவங்கள் நேர்ந்ததாக அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். “அந்தச் சின்ன வயதில் என்ன நடக்கிறது என்றே புரியாத குழப்பமும், அருவருப்பும் மட்டுமே எனக்குள் இருந்தது
மேலும் கூடவே வரும் நபரே அத்துமீறும்போது அதை யாரிடம் போய் சொல்வது என்ற பயம் என்னை முடக்கிப்போட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் நம்ப மாட்டார்களோ அல்லது தன் மீதே குற்றம் சாட்டுவார்களோ என்ற அச்சத்தால், பல ஆண்டுகளாக இந்த வேதனையை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து மன அழுத்தத்தாலும் கோபத்தாலும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு உளவியல் சிகிச்சை மூலம் இந்தத் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்திருக்கும் ரவி வலேச்சா, ஆண் குழந்தைகளும் ஆடவர்களும் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகளைப் பற்றி எந்தவித தயக்கமும் அச்சமும் இன்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான ஒரு தளத்தை என்ற பெயரில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
சினிமாத்துறை மட்டுமல்லாது அனைத்து வேலை இடங்களிலும் இதுபோன்ற கொடூரங்கள் மறைமுகமாக நடப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பாதிக்கப்பட்டவர்கள் அமைதி காக்காமல் தங்களின் குரலை உயர்த்த வேண்டும் என்றும், அவர்களுக்குச் சமூகம் உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
