தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது சந்தாதாரர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக, ஒருவர் தனது பணி காலத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இபிஎஃப்ஓ திட்டத்தில் பங்களித்திருந்தால் போதும், அவர் தனது 58 வயதிற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதி பெறுகிறார்.
தனியார் துறை ஊழியர்கள் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தும் தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்பதில் பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், இந்த 10 வருட சேவை விதிமுறை அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இபிஎஃப்ஓ விதிகளின்படி, ஒரு ஊழியரின் கணக்கில் அவரது அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12% தொகை பிஎஃப் கணக்கிற்குச் செல்கிறது. அதேபோல், வேலை வழங்கும் நிறுவனமும் 12% பங்களிப்பை அளிக்கிறது.
இதில் நிறுவனத்தின் 12% பங்களிப்பில் 8.33% தொகை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கும் மீதமுள்ள 3.67% தொகை பிஎஃப் கணக்கிற்கும் பிரித்து ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் ஓய்வூதிய நிதி தொடர்ந்து சேமிக்கப்பட்டு, அவர்கள் பணி ஓய்வு பெறும்போது கணிசமான தொகை மாதாந்திர பென்ஷனாகக் கிடைக்கிறது.
உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.15,000 ஆக இருக்கும் பட்சத்தில், அவருக்கு ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். இபிஎஃப்ஓ-வின் ஓய்வூதிய சூத்திரத்தின்படி ஒருவர் ரூ.15,000 அடிப்படைச் சம்பளத்தில் 10 ஆண்டுகள் சேவையாற்றியிருந்தால், அவருக்கு ஓய்வூதியமாக தோராயமாக ரூ.2,142 வரை மாதாந்திர பென்ஷன் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுவே அவர் 30 ஆண்டுகள் சேவையாற்றியிருந்தால், ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரித்து ரூ.6,428 வரை மாதாந்திர பென்ஷனாகக் கிடைக்கும். எனவே, 10 ஆண்டுகள் தடையற்ற சேவையை முடிப்பது உங்கள் ஓய்வுகால வாழ்க்கைக்கு ஒரு நிரந்தரப் பாதுகாப்பை உறுதி செய்யும்.
