கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் திருக்கோவிலில், 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்த திருநங்கையை கோவில் அர்ச்சகர் ஒருவர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கரம்பிடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோசியல் மீடியாவிலும் பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக நாட்டுப்புறக் கலைஞரான திருநங்கை சஞ்சனா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஆரம்பத்தில் பல்வேறு சவால்கள் இருந்தாலும், இருவரின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்ட குடும்பத்தினர் இறுதியில் இவர்களது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரு வீட்டாரின் முழு சம்மதத்துடனும் ஆசிர்வாதத்துடனும் கடலூர் திருவந்திபுரம் கோவிலில் இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
6 ஆண்டுகால காதலைத் தடைகளைத் தாண்டித் திருமணத்தில் முடித்து, திருநங்கை ஒருவருக்கு வாழ்வளித்து கரம்பிடித்துள்ள அர்ச்சகர் நாகராஜன் – சஞ்சனா தம்பதியினரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களது புதுமையான இந்தத் தொடக்கத்திற்குப் பல்வேறு தரப்பினரும் நெட்டிசன்களும் தங்களின் வாழ்த்துகளைத் தொடர்ந்து மழை எனப் பொழிந்து வருகின்றனர்.
