ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிலிருந்து வெளிவந்துள்ள ஒரு காட்சி, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் தலைகுனிய வைத்துள்ளது. கல்வி கற்க வேண்டிய பிஞ்சுப் பிள்ளைகளை வைத்து வீட்டு வேலைகளையும், சமையலறைப் பணிகளையும் செய்விக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூர் மாவட்டம் லூனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு அரசுப் பள்ளியில்தான் இந்த மனிதநேயமற்ற செயல் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சிறு வயது மாணவிகளைப் பள்ளியின் சமையலறைப் பணிகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த அதிர்ச்சி வீடியோவில், ஒரு  சிறுவன்  பள்ளியின் சமையலறையில் பெரிய பெரிய பாத்திரங்களைச் சிரமப்பட்டுத் தேய்த்துக் கொண்டிருக்கிறாள்.

மற்றொரு சிறுமி கையில் துடைப்பத்துடன்  வகுப்பறை மற்றும் வளாகத்தின் தரையைத் துடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாள். கையில் புத்தகமும் கல்வியும் இருக்க வேண்டிய அந்த மழலைகளின் கைகளில் பாத்திரங்களையும் துடைப்பத்தையும் திணித்த இந்தச் செயலை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட, அது காட்டுத் தீயாய் பரவியது.

பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் முன்னிலையிலேயே இந்தச் கொடூரம் அரங்கேறியுள்ளது என்று அப்பகுதி மக்களும் பெற்றோர்களும் கடும் ஆவேசம் அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழலும் தரமான கல்வியும் வழங்கப்படுவதாகக் கூறப்படும் அனைத்து வாதங்களும் இந்தச் சம்பவத்தின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளன.

இந்தத் தகவலும் வைரல் வீடியோவும் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளது. மழலைகளிடம் கொத்தடிமைகள் போல வேலை வாங்கிய அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீதும், பொறுப்பற்ற ஆசிரியர்கள் மீதும் கடுமையான துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.