தமிழக பாஜக முன்னாள் தலைவரும் பாஜகவின் முக்கியத் தலைவருமான அண்ணாமலை தொடங்கி நடத்தி வரும் ‘We The Leader’ என்ற அமைப்பில், இங்கிலாந்தில் பணியாற்றி வந்த வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் தனது உயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

​விருதுநகர் மாவட்டம் சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட அழகர்சாமி என்ற இளைஞர், இங்கிலாந்தில் நல்ல பொறுப்பிலும் அதிக சம்பளத்திலும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அண்ணாமலையின் கொள்கைகள் மற்றும் அவருடைய ‘We The Leader’ அமைப்பின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அழகர்சாமி, இங்கிலாந்தில் தான் பார்த்து வந்த வேலையைத் துணிச்சலாக ராஜினாமா செய்துள்ளார்.

​தொடர்ந்து, அண்ணாமலையின் ‘We The Leader’ அமைப்பில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்ட அவர், விரைவில் தமிழகம் திரும்பி முழுநேரமாக மக்கள் பணியிலும் அரசியல் களத்திலும் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பலரும் அண்ணாமலையின் தலைமையை நோக்கி ஈர்க்கப்பட்டு வரும் நிலையில், சிவகாசியைச் சேர்ந்த அழகர்சாமி தனது வேலையைத் துறந்து தமிழகம் வரவுள்ள இந்தச் சம்பவம், சோசியல் மீடியாவிலும் அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.