சட்டசபைத் விவாதத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ், திருக்கோவில் நிலங்களை மீட்டதாகக் கூறப்பட்டாலும், இன்னும் 40,245 ஏக்கர் நிலங்கள் தனிநபர் பெயரில் பட்டா மாறியிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். கணினி சிட்டா பதிவுகளின்போது சுமார் 33,949 ஏக்கர் தவறுதலாகத் தனிநபர் பெயரில் மாறியுள்ளதாகவும், அவற்றை மீட்கும் பணியைத் தற்போதைய அரசு தீவிரமாகச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வள்ளலார் தொடர்பான பெரிய திட்டத்தின் பெருவழிப் பகுதியில் கட்டடங்கள் கட்டுவது குறித்துப் பக்தர்கள் தெரிவித்த கோரிக்கையை ஏற்று, துறைசார் அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் திட்டம் முழுமையாகக் கைவிடப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

கடந்த 100 நாட்களில் சுமார் ரூ.108 கோடி டிசிபி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் ரூ.2,000 கோடி வசூலிக்க வேண்டிய நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நகைகளை உருக்கியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், HRA சட்டத்தின்படி ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், அந்த மதிப்பீட்டுப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.

மதுரை உறுப்பினர் மற்றும் அறங்காவலர் குழு நியமனங்கள் குறித்துப் பேசியபோது, “மறைமுகமாக என்னவெல்லாம் நடந்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டது அவையில் அமளியை ஏற்படுத்தியது. “மறைமுகமாக” என்ற வார்த்தையைச் சபாநாயகர் நீக்கினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, “சிவன் சொத்து குலம் நாசம் என்பதை நாங்கள் தெளிவாக அறிந்தவர்கள். எந்த அறங்காவலர் இவரிடம் அழுதார் என்பதை விளக்கினால் நாங்கள் பொறுப்பேற்கத் தயார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற குற்றச்சாட்டுகளை அவைத் தலைவர்கள் பதிவு செய்யக்கூடாது” என்று காட்டமாகத் தெரிவித்தார். இறுதியில், இது தொடர்பாக விரைவில் ஆதாரங்களை வெளியிடுவதாக அமைச்சர் ரமேஷ் பதிலளித்தார்.