கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கோட்டவிளை செல்லங்கோணம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் நபர், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்களை வைத்துத் தனது கால்களைத் தடவி மசாஜ் செய்ய வைத்துள்ளதாகத் திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது.

​அதுமட்டுமின்றி, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையையும் அந்தச் சிறுவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைத்துள்ளார். பள்ளிக்கூடத்திற்குப் படிக்க வந்த சிறுவர்களை, தனது சொந்த வேலைக்காகவும் அசுத்தமான பணிகளுக்காகவும் அந்த ஆசிரியைப் பயன்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது கல்வித் துறையும் காவல் துறையும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.