இன்றைய அவசரமான சூழலில், பலரும் கழிவறையைக் ஓய்வெடுக்கும் இடமாகக் கருதி, கைபேசியில் ரீல்ஸ் பார்த்தபடி அரை மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருக்கின்றனர். அன்றாட வாழ்வில் இது சாதாரணமாகத் தெரிந்தாலும், நாளடைவில் உடலுக்குப் பல தீவிரமான மருத்துவச் சிக்கல்களைப் பின்விளைவுகளாகப் பெரிய அளவில் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கழிவறையில் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, அவரது மலக்குடல் மற்றும் ஆசனவாய்ப் பகுதியில் இருக்கும் இரத்த நாளங்களில் தேவையற்ற அதிக அழுத்தம் உருவாகிறது. இந்த அழுத்தம் தொடரும் பட்சத்தில், ஆசனவாய்ப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மூல நோய் (Piles) உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், உடலின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளுக்கான இரத்த ஓட்டம் குறைந்து கால்கள் மரத்துப் போகவும் வாய்ப்புள்ளது.
அதேபோல், சிறுநீர்ப்பை மற்றும் குடலைத் தாங்கிப் பிடிக்கும் பெல்விக் (Pelvic) தசைகள், நீண்ட நேர அமர்வினால் நாள்படப் பலவீனமடைகின்றன. இது எதிர்காலத்தில் இயல்பாக மலம் கழிப்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்குவதுடன், இடுப்புப் பகுதியின் உறுதியையும் குறைக்கக் கூடும். போதிய நார்ச்சத்து இல்லாத உணவு, குறைந்த அளவு நீர் அருந்துதல் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவையே நீண்ட நேரம் அமர வைக்கும் மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணங்களாகும்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவர் கழிப்பறையில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும். இயல்பாக மலம் கழிக்க இயலவில்லை என்றால், கழிப்பறையிலேயே தொடர்ந்து அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து அமர்வது கழிப்பறைக்குத் திரும்பத் திரும்பச் செல்லும் பழக்கத்தையும், தேவையற்ற உடல் உபாதைகளையும் மட்டுமே அதிகரிக்கும்.
எனவே கழிவறைக்குச் செல்லும்போது கையில் கைபேசியைக் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கைபேசியால் ஏற்படும் கவனச்சிதறலே நேரம் போவது தெரியாமல் அதிக நேரம் அமர வைக்கிறது. சரியான உணவுப்பழக்கத்தையும், சீரான நேரக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் மட்டுமே கழிவறைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.
