தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ-க்கள்) அனைவருக்கும் அரசு சார்பில் இலவச புதிய கார் மற்றும் பராமரிப்புப் படிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் நிதிச்சுமையைக் சுட்டிக்காட்டி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
”தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் இருப்பதாக முதலமைச்சரே தொடர்ந்து கூறி வருகிறார். இத்தகைய சூழலில் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசுப் பணத்தில் புதிய கார் வழங்குவது தேவையற்ற வீண் நிதிச் சுமையையே ஏற்படுத்தும். எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திமுகவின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த அரசுக் கார்களைப் பெறப்போவதில்லை” என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், “அனைவருக்கும் ஆடம்பரமாகக் கார் வழங்குவதைத் தவிர்த்து, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள பொருளாதாரத் தரவுகளின் அடிப்படையில் உண்மையிலேயே நலிவடைந்த மற்றும் ஏழை எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் கார் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார். 59 திமுக எம்.எல்.ஏ-க்களும் கையெழுத்திட்ட கடிதத்தை பேரவையில் சமர்ப்பித்ததாக அவர் கூறியதை அடுத்து, சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
